ரஞ்சி கிரிக்கெட்: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி 310 ரன்கள் குவிப்பு


ரஞ்சி கிரிக்கெட்: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி 310 ரன்கள் குவிப்பு
x

பெங்கால் அணி வீரர்கள் சுதிப் கராமி, அனிஸ்துப் மஜூம்தார் 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஜார்கண்டுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணி 310 ரன்கள் குவித்துள்ளது.

பெங்களூரு,

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஐ.பி.எல். போட்டிக்காக லீக் சுற்று முடிந்ததும் நிறுத்தப்பட்டு இருந்த ரஞ்சி கோப்பை போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மைதானங்களில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக 3 ஆட்டங்கள் சற்று தாமதமாக தொடங்கியது.

இதில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஜார்கண்ட் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட அபிஷேக் ராமன், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் நல்ல அடித்தளம் அமைத்தனர்.

அபிஷேக் ராமன் 41 ரன்கள் (72 பந்து, 7 பவுண்டரி) எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அணியின் ஸ்கோர் 132 ரன்னாக உயர்ந்த போது அபிமன்யு ஈஸ்வரன் 65 ரன்னில் (124 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுஷாந்த் மிஸ்ரா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

சுதிப் கராமி சதம்

இதைத்தொடர்ந்து அனுஸ்துப் மஜூம்தார், இளம் வீரர் சுதிப் கராமியுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ரன்னை உயர்த்தினார்கள். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.

முதல் சதத்தை பதிவு செய்த சுதிப் கராமி 106 ரன்களுடனும் (204 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) , அனுஸ்துப் மஜூம்தார் 85 ரன்களுடனும் (139 பந்து, 11 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 178 ரன்கள் திரட்டினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story