முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: முதல் முறையாக கோப்பையை வென்றது மும்பை..!
இமாசலபிரதேசத்தை வீழ்த்தி மும்பை அணி, முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது.
கொல்கத்தா,
சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இமாசலபிரதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. இமாசல பிரதேச அணியில் அதிகபட்சமாக ஏகாந்த் சென் 37 ரன்களும், ஆகாஷ் வசிஷ்ட் 25 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்களும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 ரன்களும் எடுத்தனர். சர்பராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து முதல்முறையாக மும்பை அணி, சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை தனுஷ் கோடியான் வென்றார்.