முரளிவிஜய் சதம் வீண்: திருச்சியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்


முரளிவிஜய் சதம் வீண்: திருச்சியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்
x

image tweeted by @TNPremierLeague

நெல்லை ராயல் கிங்ஸ் 66 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

கோவை,

8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. கோவையில் இன்று இரவு நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிரஞ்சன் 5 ரன்களிலும் சூர்யபிரகாஷ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த பாபா அபராஜித் - சஞ்சய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திருச்சி பந்துவீச்சாளர்கள் திணறினர். 35 பந்துகளில் சஞ்சய் அரைசதம் அடித்தார். அவரை தொடர்ந்து பாபா அபராஜித் 37 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இருவரும் அரைசதத்தை கடந்த பிறகு பவுண்டரி மழைகளை பொழிய தொடங்கினர். இதனால் நெல்லை 19 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. இறுதி ஓவரில் சஞ்சய் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நெல்லை 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 236 ரன்களை குவித்தது. சஞ்சய் 103 ரன்களுடனும் அபராஜித் 92 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், சந்தோஷ் ஷிவும் களமிறங்கினர். சந்தோஷ் 9 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அமித் சத்விக் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார்.

ஒருபுறம் முரளி விஜய் களத்தில் அதிரடி காட்டி அணியின் வெற்றிக்காக போராடிய நிலையில், எதிர் முனையில் ஆடிய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். முரளிவிஜய் தன் பங்குக்கு 66 பந்துகளில் 12 சிக்சருடன் 121 ரன்கள் விளாசிய நிலையில், அவரும் அவுட்டாக, இறுதியில் நெல்லை அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



Next Story