பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காயம்


பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காயம்
x

image courtesy: @IPL

ஐபிஎல்-லில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

லக்னோ,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டியின் இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுல் காயமடைந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை டு பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார்.

வலியால் துடித்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பின்னர், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். காயத்தின் தன்மை குறித்து பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும்.

எனினும், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வதற்காக தனது காயத்தையும் பொருட்படுத்தாமல், கடைசி வீரராக பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் துரதிஷ்வடசமாக மறுமுனையில் விக்கெட் வீழ்ந்ததால், அவர் அணியை வெற்றிபெறச்செய்ய முடியவில்லை. அவர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.


Next Story