பிசிசிஐ தொடர்பான வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றம்!


பிசிசிஐ தொடர்பான வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றம்!
x

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடைகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொடர்பான மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

பிசிசிஐயின் சட்ட விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான மனு 2020இல் பிசிசிஐயால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று கூறியதாவது:-

பிசிசிஐ விவகாரங்களில் ஆகஸ்ட் 9, 2018 அன்று முந்தைய தீர்ப்பை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் சந்திரசூட், நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சி.டி. ரவிக்குமார், ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.

தற்போது அதில் 2 நீதிபதிகள் ஓய்பெற்ற நிலையில், பிசிசிஐயின் சட்ட விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்படும் என்று கூறியது.

முன்னதாக, பிசிசிஐ விவகாரங்களில் உதவ மூத்த வழக்கறிஞர் மனிந்தர் சிங்கை ஜூலை 21 அன்று அமிக்ஸ் கியூரியாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்து, பிசிசிஐ உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பாக கிரிக்கெட் அமைப்பின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை கோர்ட்டு ஒத்திவைத்தது.

மேலும், நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி வழங்கிய அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கையில் பிசிசிஐயில் சீர்திருத்தங்களை செய்ய கமிட்டி பரிந்துரைத்தது.

பிசிசிஐயின் சட்ட விதிகளின்படி, மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பிசிசிஐயில் தலா மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பணியாற்றிய எவருக்கும் கட்டாயமாக மூன்று வருட ஓய்வு காலம் அளிக்கப்பட்ட வேண்டும்.

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் செப்டம்பர் 2022 இல் முடிவடைகிறது.

தற்போதைய பதவிகளுக்கு முன்னர், 2014 இல் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார், ஜெய்ஷா 2013 முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக பணியாற்றினார்.ஆகவே, தற்போதைய சட்டப்படி, அவர்களால் இனி அந்த பதவிகளில் தொடர முடியாது.

இந்த நிலையில், பிசிசிஐயால் முன்மொழியப்பட்ட சட்ட திருத்தத்தில், அதன் அலுவலகப் பணியாளர்களுக்கான ஓய்வு காலத்தை ரத்து செய்யக் கோரியுள்ளது. இதன்மூலம், கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் பதவியை நிறைவு செய்திருந்தாலும் அவர்கள் பதவியில் தொடர உதவும்.


Next Story