ஜாமி சுமித் அபார சதம்.. இங்கிலாந்து 358 ரன்களில் ஆல் அவுட்.. இலங்கை திணறல்


ஜாமி சுமித் அபார சதம்.. இங்கிலாந்து 358 ரன்களில் ஆல் அவுட்.. இலங்கை திணறல்
x

image courtesy: twitter/@ICC

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 61 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜாமி சுமித் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாமி சுமித் சதம் அடித்து அசத்தினார். அவரது சதத்தின் மூலம் இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியது. இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காததால் இங்கிலாந்து 85.3 ஓவர்களில் 358 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாமி சுமித் 111 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 122 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, வெறும் 3 ஓவர்களிலேயே 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. மேத்யூஸ் 6 ரன்களுடனும், திமுத் கருணாரத்னே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story