இந்தியாவுக்கு கொடுத்த கடனை வாங்க வேண்டிய நேரம் இது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்


இந்தியாவுக்கு கொடுத்த கடனை வாங்க வேண்டிய நேரம் இது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
x

image courtesy: PTI

விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதுமே வில்லனாக பார்ப்பார்கள் என்று ஜெப் லாசன் கூறியுள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதுமே வில்லனாக பார்ப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜெப் லாசன் கூறியுள்ளார். அதே சமயம் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலியர்கள் சத்தமாக கைதட்டி பாராட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2014 முதல் இந்தியாவுக்கு கடனாக கொடுத்த பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இம்முறை ஆஸ்திரேலியா திரும்பப் பெறும் என்றும் லாசன் சவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- " இந்த தொடரில் விராட் கோலி வில்லனாக இருப்பார். வேகப்பந்து வீச்சாளராக பாக்கியம் பெற்ற பும்ராவுக்கு பைன் லெக்கில் பீல்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அங்கே அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களுடன் உரையாடி, புன்னகையையும் இதயங்களையும் வெல்வார். விராட் கோலி இன்பீல்டிங்கில் பதுங்கியிருந்து பிரமாதமாக பீல்டிங் செய்வார். ஏதேனும் ஆஸ்திரேலிய வீரருடன் காரசாரமாக உரையாடுவார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலியை ஒரு போட்டியாளராக விரும்புவார்கள். கண்டிப்பாக அவர் 50, 100 ரன்கள் அடிக்கும்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சத்தமாக பாராட்டுவார்கள்.

13 வருடத்திற்கு முன்பு வந்ததிலிருந்தே வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய சூழ்நிலைகள் விராட் கோலிக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய பவுலர்களை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் அதே கூர்மை அவரிடம் இருக்குமா? என்பது கேள்வியாகும். பிசிசிஐக்கு கடந்த 2 தசாப்தங்களாக கடனாக கொடுத்திருந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையை மீண்டும் ஆஸ்திரேலிய தலைமையகத்தில் வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியனாக இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடரை வெல்லாதது அந்த மகுடத்தை நிலையாக வைத்திருக்காது" என்று கூறினார்.


Next Story