ஜூனியர் உலக கோப்பை: முஷீர் கான் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


ஜூனியர் உலக கோப்பை: முஷீர் கான் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
x
தினத்தந்தி 30 Jan 2024 9:24 PM IST (Updated: 30 Jan 2024 9:24 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது

ப்ளூம்போன்டைன்,

15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற முதலாவது 'சூப்பர் சிக்ஸ்' சுற்று போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பாகவே 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. இந்திய அணியின் அனல் பறந்த பந்து வீச்சால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

முடிவில் நியூசிலாந்து அணி 28.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சாமி பாண்டே 4 விக்கெட்டுகளும், ராஜ் லிம்பானி மற்றும் முஷீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி வீரர் முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story