டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி..!!


டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி..!!
x
தினத்தந்தி 21 Nov 2023 5:15 PM GMT (Updated: 21 Nov 2023 5:20 PM GMT)

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

இதனைத்தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 11ஆம் தேதி மொகாலியிலும், 14-ஆம் தேதி இந்தூரிலும், 17-ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளன.

உலகக் கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வளர்ந்து வரும் ஆசிய அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று அசத்தியது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதன் அரையிறுதி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது.

ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளுக்கு வெளியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு இரு அணிகளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின.


Next Story