2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் - மழையால் பாதிக்கப்படுமா..?


2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் - மழையால் பாதிக்கப்படுமா..?
x

Image Courtacy: BCCITwitter

முதலாவது போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

திருவனந்தபுரம்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்க தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதற்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் கண்டுள்ள இந்திய இளம் படை முதலாவது போட்டியில் அச்சமின்றி ஆடி 209 ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து வியக்கவைத்தது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச சேசிங் இதுவாகும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்றைய ஆட்டத்துக்கு களம் திரும்பினால் ஆஸ்திரேலியா மேலும் வலுப்பெறும். அவர்கள் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார்களா என்பது குறித்து எதுவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 16 ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா 10 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

மழையால் பாதிக்கப்படுமா..?

திருவனந்தபுரம் மைதானத்தில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இரண்டில் வெற்றியும் (நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) கண்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று பிற்பகலில் மழை பெய்ததால் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடவில்லை. இன்று மழை விட்டு, விட்டு பெய்யும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித், மேத்யூ ஷார்ட் அல்லது டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி அல்லது மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா அல்லது ஆடம் ஜம்பா.


Next Story