நாட்டுக்காக விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் - ஹர்திக் பாண்ட்யா


நாட்டுக்காக விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் - ஹர்திக் பாண்ட்யா
x

வங்காளதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஆன்டிகுவா,

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 196 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சகிப், ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இந்த வெற்றிக்கு 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து ஆல்ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் காயமடைந்த தாம் மீண்டும் பைனலுக்கு முன் கம்பேக் கொடுக்க முயற்சித்ததாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இருப்பினும் தம்மை ரசிகர்கள் நம்பாத அந்த சூழ்நிலையில் கடவுள் வேறு திட்டம் போட்டதாக தெரிவிக்கும் அவர் அதையெல்லாம் தாண்டி இந்தியாவுக்கு விளையாடும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பெருமை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அனைத்தையும் விட நாங்கள் ஒன்றாக இருந்து எங்களுடைய திட்டங்களை செயல்படுத்தினோம். அந்த வகையில் நான் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு படி முன்னதாக இருந்தேன். பேட்டிங்கில் நாங்கள் அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தோம். அதை நாங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. மற்றபடி நாங்கள் நன்றாக விளையாடினோம்.

நாட்டுக்காக விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். கடந்த முறை வேடிக்கையான காயமடைந்த போது கம்பேக் கொடுக்க முயற்சித்தேன். ஆனால் கடவுள் வேறு திட்டம் வைத்திருந்தார். மற்றொரு நாள் நான் ராகுல் டிராவிட் சாரிடம் பேசினேன். அப்போது கடினமாக உழைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று அவர் சொன்னார். அந்த வார்த்தைகள் என்னுடன் நீண்ட காலமாக ஒட்டிக் கொண்டுள்ளது" என்று கூறினார்.


Next Story