பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை துவங்க பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்


பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை துவங்க பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்
x

Image Courtesy: BCCI 

பி.சி.சி.ஐ பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கிய முடிவாக பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று (அக்.,18) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்துவந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதிய பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி (67 வயது) இன்று தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வானார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கிய முடிவாக பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக 8 அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆண்கள் ஐபிஎல் தொடர் இன்று 10 அணிகள் விளையாடும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் பெண்கள் கிரிக்கெட் தொடர் தற்போது வரை பல காரணங்களால் தொடங்கப்படவில்லை. பிசிசிஐயிடம் பெண்கள் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் இன்று நடந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் ஐபிஎல் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி எந்த தடையும் இன்றி அடுத்த ஆண்டே பெண்கள் ஐபிஎல் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் டி20 சேலஜ் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.


Next Story