'கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது..' ரோகித்துக்கு நன்றி தெரிவித்த மும்பை அணி..!


கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது.. ரோகித்துக்கு நன்றி தெரிவித்த மும்பை அணி..!
x

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிற உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. .

இந்த நிலையில் , அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது. இதையடுத்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவிற்கு அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அணி நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது;

"ரோகித் சர்மாவின் ஒப்பற்ற தலைமைக்கு நன்றி. 2013 முதல் மும்பை அணியின் கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை குவித்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக இடம்பிடித்துள்ளார்.

அவரது தலைமையில், மும்பை இந்தியன்ஸ் வெற்றிகர அணியாகவும், அதிகம் விரும்பப்படும் அணியாகவும் மாறி இருக்கிறது. அணியை மேலும் வலுப்படுத்த களத்திலும் வெளியிலும் அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம்:" என தெரிவித்துள்ளது.


Next Story