இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் அவர்தான் - கேப்டன் ரோகித் பாராட்டு


இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் அவர்தான் - கேப்டன் ரோகித் பாராட்டு
x

டி20 கிரிக்கெட்டில் சதங்கள், அரைசதங்கள் அடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆன்டிகுவா,

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்ட்யாவின் அரை சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், "அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாடுவது குறித்து நீண்ட காலமாக பேசி வருகிறேன். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இனி ஆங்கர் ரோல் என்பதே கிடையாது. இந்த சூழல், பிட்ச் ஆகியவற்றுக்கு நாங்கள் விரைவாக மாறிக் கொண்டோம். மொத்தமாக பார்க்கும்போது பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். டி20 கிரிக்கெட்டில் 8 பேட்ஸ்மேன்களும் தங்களின் பணியினை செய்தாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் ஒருவர் அரைசதம் அடித்ததன் மூலமாக 196 ரன்களை எட்டினோம்.

டி20 கிரிக்கெட்டில் அரைசதம், சதங்கள் அடிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பேட்ஸ்மேன்களின் ஒரே பணி பவுலர்களை அழுத்தத்தில் வைத்திருப்பதுதான். இந்திய அணியில் விளையாடிய அத்தனை பேட்ஸ்மேன்களும் அதனைத்தான் செய்தோம். இப்படிதான் விளையாட விரும்புகிறோம். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். கடந்த போட்டியில் சொல்லியதை போல், ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் எங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். டாப் 5 வீரர்கள் அதிரடியாக விளையாடிய பின், நன்றாக பினிஷ் செய்ய வேண்டும்.

ஹர்திக் பாண்ட்யா இன்று சிறப்பாக விளையாடினார். அவரால் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் அவர்தான். இதேபோல் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், நாங்கள் சிறந்த இடத்தை எட்டுவோம். பவுலருடன் ஒரு விஷயத்தை ஆலோசித்து அது சரியாக நடக்கும்போது கூடுதல் உற்சாகம் கிடைக்கும். பவுலிங் செய்த அனைத்து வீரர்களும் சிறப்பாக பிட்சை புரிந்து கொண்டனர். நாங்கள் ஆலோசனை செய்தபடி சிறப்பாக திட்டத்தை செயல்படுத்தினார்கள்" என்று கூறினார்.


Next Story