ஹர்திக் அந்த பாகிஸ்தான் முன்னாள் வீரரை நினைவுபடுத்துகிறார் - அம்பத்தி ராயுடு


ஹர்திக் அந்த பாகிஸ்தான் முன்னாள் வீரரை நினைவுபடுத்துகிறார் - அம்பத்தி ராயுடு
x

ஹர்திக் பாண்ட்யாவை பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துல் ரசாக்குடன் ஒப்பிட்டு அம்பத்தி ராயுடு சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மும்பை,

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்களிலும் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியா இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு எளிதில் முன்னேறிவிடும். மாறாக தோல்விடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் முன்னேற நல்ல வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்தியா வெற்றி பெறவே அனைவரும் விரும்புகின்றனர்.

முன்னதாக நடப்பு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை சேர்த்தது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் கடைசி இடத்தை பிடித்து மும்பை அணி வெளியேறியிருந்தது. அவரது செயல்பாடுகளும் சிறந்த அளவில் இல்லை. மேலும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர்.

ஆனால் இந்த கடினமான சூழல்களை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வங்காளதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியின்போது பேட்டிங்கில் அரைசதம் அடித்த அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துல் ரசாக்குடன் ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஹர்திக் பாண்ட்யா முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக்கை நினைவுபடுத்துகிறார். அவரைப்போலவே பாண்ட்யா பந்து வீசுகிறார். மேலும் பின் வரிசையில் களமிறங்கி அவர் எவ்வாறு அதிரடியாக ஆடுவாரோ அதே போன்று இவரும் ஆடுகிறார். அப்துல் ரசாக் போன்று பந்துவீச்சு பாணியை வைத்திருக்கும் பாண்ட்யா அடிக்கடி வேகத்திலும் மாற்றம் செய்து அசத்துகிறார்" என்று கூறினார்.


Next Story