ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 152 ரன்களுக்கு 'ஆல்-அவுட்'


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 152 ரன்களுக்கு ஆல்-அவுட்
x

image courtesy: Proteas Men twitter

தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 48.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பிரிஸ்பேன்,

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் திணறினர்.

ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்ததால் பந்து வேகத்துடன் நன்கு பவுன்ஸ் ஆனதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய பவுலர்கள், தென்ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்சில் 48.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர். அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 64 ரன்னும், பவுமா 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியும், தென்ஆப்பிரிக்க வீரர்களின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியது. 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி டிராவிஸ் ஹெட்டின் அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்துள்ளது. டிராவிஸ் ஹெட் 78 ரன்களுடன் (77 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளார்.

இந்த டெஸ்டில் நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன. தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா, அன்ரிச் நோர்டியா தலா 2 விக்கெட் சாய்த்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Next Story