'ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா?'- ஸ்ரேயாஸ் ஐயர் பதில்


ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா?- ஸ்ரேயாஸ் ஐயர் பதில்
x

image courtesy; AFP

தினத்தந்தி 3 Nov 2023 8:33 AM GMT (Updated: 3 Nov 2023 9:26 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார்.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

அதிலும் குறிப்பாக சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 (3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்கள் எடுத்திருந்த நிலையில் 47.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் இந்த ஆட்டத்தில் 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து நடப்பு உலகக் கோப்பை தொடரின் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார்.

இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அசத்தினாலும் ரபாடா, ஜான்சன் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை சமாளிக்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஆட்டத்தின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில் பின்வருமாறு;- "ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றன என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்.

ஆனால் அதில் நான் 2, 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள்தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்" என்று கூறியுள்ளார்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story