பார்டர் -கவாஸ்கர் கோப்பை தொடர்: வெற்றி பெறப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? பாண்டிங் கணிப்பு


பார்டர் -கவாஸ்கர் கோப்பை தொடர்: வெற்றி பெறப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? பாண்டிங் கணிப்பு
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது

ஆனால் இயற்கையாகவே போராடக்கூடிய குணத்தை கொண்ட ஆஸ்திரேலியர்கள் கடந்த 2 தோல்விக்கு இம்முறை இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுப்பார்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும் இம்முறை 5 போட்டிகள் நடைபெறுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே 3 - 1 என்ற கணக்கில் இந்தியாவை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று கணிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"அது மிகவும் போட்டி மிகுந்த தொடராக இருக்கும். கடந்த 2 தொடர்களில் இங்கு நடந்தவற்றின் பின்னணியில் இம்முறை இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இம்முறை 5 போட்டிகள் நடைபெறுவதுதான் அத்தொடரில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கடந்த முறை 4 போட்டிகள் கொண்ட தொடர்தான் நடந்தது. எனவே இம்முறை 5 போட்டிகளுக்கு அனைவரும் காத்திருக்கிறோம்.

இம்முறை அதிக டிரா போட்டிகள் இருக்குமா என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் எப்போதும் கணிக்க மாட்டேன். இம்முறை மழையால் ஒரு போட்டி பாதிக்கப்படலாம். ஒரு போட்டி சமனில் முடிவடையலாம். எவ்வாறாயினும் 3 - 1 கணக்கில் அந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்" என்று கூறினார்.


Next Story