பார்டர் கவாஸ்கர் டிராபி, ஆஷஸ் தொடருக்கு சமமானது - மிட்செல் ஸ்டார்க்


பார்டர் கவாஸ்கர் டிராபி, ஆஷஸ் தொடருக்கு சமமானது - மிட்செல் ஸ்டார்க்
x

கோப்புப்படம்

பார்டர் கவாஸ்கர் டிராபி, ஆஷஸ் தொடருக்கு சமமானது என்று நினைக்கிறேன் என மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடைசியாக நடைபெற்ற 4 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது. இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வெல்ல கடுமையாக போராடும் என தெரிகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை போல பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவும் சமமான சவாலை கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். ஆனாலும் இம்முறை தாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தற்போது 5 போட்டிகள் நடைபெறுவதால் இது (பார்டர் கவாஸ்கர் டிராபி) கிட்டத்தட்ட ஆஷஸ் தொடருக்கு சமமானது. சொந்த மண்ணில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். இந்தியா வலுவான அணி என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிமிடத்தில் நாங்கள் இருவருமே உலகின் டாப் 2 அணிகளாக உள்ளோம். எனவே ரசிகர்களுக்கு சுவாரசியமான தொடர் வரவுள்ளது. வீரர்களுக்கும் அது சிறந்த தொடராக அமையும். ஜனவரி 8-ம் தேதி அந்தக் கோப்பை மீண்டும் எங்கள் கையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story