டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கியது ஆஸ்திரேலியா..!!


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கியது ஆஸ்திரேலியா..!!
x

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்பட்ட இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்னுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று எதிர்பார்த்தது போலவே தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலைகுலைந்தனர். சாரல் எர்வீ (21 ரன்), டி புருன் (28 ரன்), கயா ஜோன்டா (1 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினர். 5-வது விக்கெட்டுக்கு பவுமா, விக்கெட் கீப்பர் கைல் வெரைன் ஜோடியினர் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர்.

இன்னிங்ஸ் வெற்றி

இவர்களை ஸ்கோர் 128-ஐ எட்டிய போது வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் வெரைன் (33 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அரைசதத்தை கடந்த பவுமா (65 ரன், 144 பந்து, 6 பவுண்டரி) நாதன் லயனின் சுழற்பந்து வீச்சை முட்டிப்போட்டு தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் லுங்கி இங்கிடி 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன் விளாசி 200 ரன்களை கடக்க உதவினார். தொடர்ச்சியாக 7 இன்னிங்சுக்கு பிறகு ஒரு வழியாக 200 ரன்களை தாண்டியது மட்டுமே ஒரே ஆறுதல்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட்டும், ஸ்காட் போலன்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இரு வீரர்கள் ரன்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

17 ஆண்டுக்கு பிறகு...

ஏற்கனவே தொடக்க டெஸ்டில் 2 நாளுக்குள் வெற்றிக்கனியை பறித்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. தங்களது சொந்த நாட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்வது 17 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2005-06-ம் ஆண்டுகளில் தொடரை வென்றிருந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு 2008-09, 2012-13, 2016-17-ம் ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் தொடர்களில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

கேப்டன்கள் கருத்து

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், 'மூத்த வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் இருவரும் கடுமையான வெப்பத்துக்கு மத்தியிலும் மனஉறுதியுடன் விளையாடி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து பந்து வீசினார். இதே போல் கேமரூன் கிரீனும் விரலில் அடைந்த காயத்தோடு பேட்டிங் செய்தார். உண்மையிலேயே இத்தகைய முயற்சியை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். மெல்போர்னில் நடக்கும் 'பாக்சிங் டே' டெஸ்ட் எங்களுக்கு மிகப்பெரிய நிகழ்வு. அதிலும் இந்த முறை மறைந்த ஷேன் வார்னேவின் நினைவுகளோடு விளையாடியது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது' என்றார்.

தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆண்டில் சந்தித்த 3-வது இன்னிங்ஸ் தோல்வி இதுவாகும். 1936-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ஒரே ஆண்டில் 3 முறை இன்னிங்ஸ் தோல்விக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், 'படுதோல்வியை சந்தித்து உள்ளோம். இதில் இருந்து நாங்கள் மிக வேகமாக மீண்டு வர வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளில் அணியில் நிறைய முன்னணி பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்று விட்டனர். இது, இளம் வீரர்களுக்கு தங்களது இடத்தை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பை தந்திருக்கிறது. ஆனாலும் தற்போதைய சூழலில் அனுபவமற்ற பேட்டிங் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டை நேசிக்கும் பெருமைமிக்க தேசமாக தென்ஆப்பிரிக்கா இருக்கிறது. அந்த பெருமையை நிலைநாட்டும் முனைப்போடு சிட்னி டெஸ்டில் விளையாட வேண்டும். 0-3 என்று முடிவதை விட 1-2 என்று நிறைவு செய்வது நன்றாக இருக்கும் ' என்றார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கியது ஆஸ்திரேலியா

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும். வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 12 புள்ளிகள் கிடைத்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில்ஆஸ்திரேலியா 78.57 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பதுடன் இறுதிப்போட்டி வாய்ப்பையும் வெகுவாக நெருங்கி விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 5 டெஸ்ட் போட்டிகள் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்று, இந்தியாவுக்கு எதிராக 4) உள்ளன. இவற்றில் ஒரு டிரா அல்லது ஒரு வெற்றி பெற்றால் போதும். ஆஸ்திரேலியா இறுதி சுற்றை உறுதி செய்து விடும். இந்தியா 2-வது இடத்திலும் (58.93 சதவீத புள்ளி), இலங்கை 3-வது இடத்திலும் (53.33), தென்ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் (50.00), இங்கிலாந்து 5-வது இடத்திலும் (46.97) உள்ளன. இந்திய அணி இறுதி சுற்றை எட்ட எஞ்சிய 4 டெஸ்டுகளில் குறைந்தது 3-ல் வெற்றி பெற்றாக வேண்டும்.

பேட்டிங்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு மோசமான ஆண்டு

இந்த ஆண்டில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 11 டெஸ்டுகளில் விளையாடி 6-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால் பெரும்பாலான வெற்றிகள் மிரட்டலான பந்து வீச்சு மூலமே கிடைத்தன. பேட்டிங்கை பொறுத்தவரை அவர்களுக்கு இது மறக்கக்கூடிய ஆண்டு என்றே வர்ணிக்க வேண்டும். 2022-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்சில் மொத்தம் 9 முறை 200 ரன்னுக்குள் அடங்கி இருக்கிறது. அந்த அணி 200 ரன்னுக்குள் அதிக முறை சுருண்ட ஆண்டு இது தான். இதற்கு முன்பு 7 முறை இத்தகைய குறைந்த ரன்னில் ஆட்டமிழந்ததே மோசமானதாக இருந்தது.

தென்ஆப்பிரிக்க வீரர்களில் சாரல் எர்வீ, கைல் வெரைன் ஆகியோர் மட்டுமே இந்த ஆண்டில் சதம் அடித்திருக்கிறார்கள். ஓராண்டில் குறைந்தது 10 டெஸ்டுகளில் விளையாடியதில் குறைவான சதங்கள் அடித்த 3-வது அணியாகும். இதற்கு முன்பு 1995-ம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் ஒரு சதமும் (10 டெஸ்ட்), 2010-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியில் 2 சதமும் (10 டெஸ்ட்) அடிக்கப்பட்டிருந்தன.


Next Story