இப்படி ஒரு அணியை இதுவரை பார்த்ததே இல்லை - இலங்கையை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்


இப்படி ஒரு அணியை இதுவரை பார்த்ததே இல்லை - இலங்கையை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

இங்கிலாந்து - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 54 ஓவர் முடிந்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 65 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. காமிந்து மென்டிஸ் (52 ரன்), மிலன் ரத்னநாயகே (7 ரன்) களத்தில் இருந்தனர். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இலங்கை அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் அடித்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் 2வது நாளின் கடைசி ஓவரை இலங்கையின் அசிதா பெர்னாண்டோ வீசினார். எனவே 3வது நாளின் முதல் ஓவரை அவர் வீச முடியாது என்பது விதிமுறையாகும். ஆனால் அந்த விதிமுறை தெரியாத இலங்கை கேப்டன் 3வது நாளின் முதல் ஓவரை அவரிடமே வழங்கினார். அதற்கு அம்பயர் அனுமதி வழங்காததால் வேறு வழியின்றி ஸ்பின்னரான பிரபத் ஜெயசூர்யாவை முதல் ஓவரை வீச வைத்தார்.

இந்நிலையில் அந்த அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாத இலங்கையை போன்ற ஒரு மோசமான அணியை தாம் பார்த்ததில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "இன்றைய இலங்கை அணியை போல் ஒரு அணியை நான் பார்த்ததில்லை. ஏனெனில் அதைப் பற்றிய ஐடியா கேப்டனுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கும் இல்லை. இன்று (அதாவது நேற்று) காலை அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக கடினமாக முயற்சிக்க எந்த வழியையும் உருவாக்காமலேயே களத்திற்கு எப்படி வந்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் உங்களுக்கு ஒரு நாளின் ஆட்டத்தை எப்படி சரியாகத் தொடங்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. அப்படி என்ன செய்கிறீர்கள்? 3வது நாள் என்பது மிகவும் முக்கியமான பெரிய நாள்.

முதல் 2 நாட்களில் நீங்கள் கடினமாக விளையாடி போராட்டம் குணங்களை காட்டியுள்ளீர்கள். அப்படி இருந்தும் 3வது நாளின் முதல் பந்தில் களத்தில் உங்களது அணியில் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறார் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போகலாம்? யார் பந்து வீசுவார், என்ன பீல்டிங் வைக்கலாம், ஜாமி சுமித்தை சாய்க்க என்ன திட்டத்தை பின்பற்றலாம் என்ற எதையுமே நீங்கள் செய்யாதது என்னை முழுமையாக ஆச்சரியப்படுத்துகிறது" என்று கூறினார்.


Next Story