7-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா மீண்டும் 'சாம்பியன்'


7-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன்
x

7-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் ‘சாம்பியன்’ ஆனது.

இங்கிலாந்து,

7-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து 4-வது முறையாக நடத்தியது. ஒரு சில லீக் ஆட்டங்கள் அண்டை நாடுகளான ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ், நெதர்லாந்து நாடுகளிலும் நடந்தன. 1999-ம் ஆண்டு மே 14-ந்தேதி முதல் ஜூன் 20-ந்தேதி வரை நடந்த இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து கழற்றி விடப்பட்டு வங்காளதேசம், ஸ்காட்லாந்து அறிமுக அணிகளாக இடம் பிடித்தன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுக்கு பிறகு 'சூப்பர் சிக்ஸ்' என்ற குழப்பமான முறை கொண்டு வரப்பட்டது. அதாவது லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். அத்துடன் சூப்பர் சிக்சுக்கு முன்னேறும் அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளை தோற்கடித்து இருந்தால் அதற்குரிய புள்ளிகளை போனஸ் புள்ளியாக சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு எடுத்து வர முடியும்.

'ஏ' பிரிவில் அங்கம் வகித்த முகமது அசாருதீன் தலைமையிலான இந்தியஅணி தனது முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேயிடம் தோல்வியை தழுவியது. இதில் ஜிம்பாப்வேயிடம் 'சரண்' அடைந்தது தான் கடைசி வரை பெரும் தலைவலியாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் மெதுவான பந்து வீச்சுக்காக 4 ஓவர்களை அபராதமாக இழந்து 46 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 9 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஒலங்கா வீசிய ஆட்டத்தின் 45-வது ஓவரில் ராபின்சிங் (35 ரன்), ஸ்ரீநாத் (18 ரன்), வெங்கடேஷ்பிரசாத் (0) ஆகியோர் வரிசையாக வீழ்ந்தனர். இதனால் 3 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதன் பின்னர் எழுச்சி பெற்ற இந்தியா அடுத்த ஆட்டங்களில் கென்யா, இலங்கை, இங்கிலாந்தை போட்டுத்தாக்கி ஒரு வழியாக சூப்பர்6 சுற்றை அடைந்தது. இதில் இலங்கைக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்ததும், அதில் சவுரவ் கங்குலி 183 ரன்கள் விளாசியதும் புதிய சாதனையாக பதிவானது. கங்குலியின் 183 ரன்களே, இந்த நாள் வரைக்கும் உலகக் கோப்பையில் இந்திய வீரரின் அதிகபட்சமாக நீடிக்கிறது.

முதல் 4 ஆட்டங்களில் வெற்றி கண்ட தென்ஆப்பிரிக்கா கடைசி லீக்கில் யாரும் எதிர்பாராத வகையில் 48 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் மண்டியிட்டது. இதே போல் 'பி' பிரிவில் பாகிஸ்தான் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனாலும் பாகிஸ்தான் முதல் 4 ஆட்டங்களில் வென்று இருந்ததால், இந்த தோல்வியால் பாதிப்பு எதுவுமில்லை.

'ஏ' பிரிவில் இருந்து தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் இருந்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் சூப்பர் 6 சுற்றை எட்டின. ஆச்சரியப்படும் வகையில் ஜிம்பாப்வே 4 புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்தது. போனஸ் புள்ளி இல்லாமல் சூப்பர்சிக்ஸ் சுற்றை எட்டிய இந்தியா எதிர் பிரிவில் உள்ள 3 அணிகளையும் கட்டாயம் வீழ்த்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் சறுக்கிய இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது. அதுவும் கார்கில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதால் உணர்வுபூர்வமாக மிகப்பெரிய வெற்றியாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவை போன்று சூப்பர்6 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலியா அதை கச்சிதமாக (இந்தியா, ஜிம்பாப்வே, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) செய்து காட்டியது. குறிப்பாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 272 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது, கேப்டன் ஸ்டீவ் வாக் 57 ரன்னில் கொடுத்த கேட்ச்சை கிப்ஸ் பிடித்தார். ஆனால் உற்சாகத்தில் பந்தை அவசர கோலத்தில் மேலே தூக்கி போட முயன்றபோது அது கையைவிட்டு நழுவிப்போனது. இது, 'சாதாரண நழுவல் அல்ல' என்பதை அடுத்த சில நாட்களில் தென்ஆப்பிரிக்கா உணரும் சூழல் உருவானது. ஸ்டீவ் வாக் 120 ரன்கள் விளாசியதுடன் கடைசி ஓவரில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

சூப்பர் சிக்ஸ் முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடியது.

பர்மிங்காமில் நடந்த பரபரப்பான 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மறுபடியும் மல்லுக்கட்டின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்காவை சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நிலைகுலைய வைத்தார். டாப்-4 பேட்ஸ்மேன்கள் அவரது சுழலுக்கு இரையானார்கள். ஆனாலும் காலிஸ் (53 ரன்), ஜான்டி ரோட்ஸ் (43 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்டனர். குளுஸ்னர் அதிரடி காட்டி வெற்றியின் விளிம்புக்கு கொண்டு வந்தார். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளமிங் வீசிய இறுதி ஓவரில் முதல் இரு பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்த குளுஸ்னர் 3-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தும் பேட்டில் சரியாக படவில்லை. இருப்பினும் வெற்றிக்குரிய ரன்னை எடுக்க துரிதமாக ஓடினார். ஆனால் எதிர்முனையில் நின்ற டொனால்டு பந்து எந்த பீல்டருக்கு செல்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய குளுஸ்னர் மறுமுனைக்கு வந்த பிறகு தான் டொனால்டு ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவர் ரன்-அவுட் செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்கா 49.4 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட் ஆகி ஆட்டம் சமன் (டை) ஆனது. உலகக் கோப்பையில் டையில் முடிந்த முதல் ஆட்டம் இது தான். இதன் பிறகு சூப்பர்6 சுற்றில் ரன்ரேட்டில் முன்னிலை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் அடித்தது. தென்ஆப்பிரிக்கா நடையை கட்டியது.

லண்டன் லார்ட்சில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் சந்தித்தன. லீக் சுற்றில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் தோற்கடித்து இருந்ததால் இறுதிசுற்றிலும் மிரட்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 39 ஓவர்களில் 132 ரன்னில் அடங்கியது. இந்த இலக்கை ஆஸ்திரேலியா 20.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக மகுடம் சூடியது. அரைஇறுதி போன்று இந்த ஆட்டத்திலும் 4 விக்கெட்டுகளை சாய்த்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றி தான் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் நீண்டகாலம் கோலோச்சுவதற்கு அச்சாரமாக அமைந்தது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த தென்ஆப்பிரிக்காவின் குளுஸ்னர் (281 ரன் மற்றும் 17 விக்கெட்) தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சோகத்திலும் சதம் கண்ட தெண்டுல்கர்

இந்த உலகக் கோப்பையில் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் விளையாடிக்கொண்டிருந்த போது, மும்பையில் அவரது தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். உடனடியாக தாயகம் திரும்பிய அவர் இறுதிச் சடங்கை முடித்துக் கொண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்தார்.

அதன் பிறகு பிரிஸ்டலில் நடந்த கென்யாவுக்கு எதிரான லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதில் சோகத்தை மறந்து களம் கண்ட தெண்டுல்கர் 140 ரன்கள் (101 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரசிகர்களின் இதயங்களை வென்றார். சதத்தை அவர், மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.

குரோனேவின் தில்லுமுல்லு

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோனே காதில் மைக்ரோ போன் மாட்டிக்கொண்டு அதன் மூலம் மைதானத்தில் இருந்தபடியே வீரர்களின் அறையில் இருந்த பயிற்சியாளர் பாப் உல்மரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டார். தொடக்க பேட்ஸ்மேனாக ஆடிக்கொண்டிருந்த இந்திய வீரர் கங்குலி இதை கண்டறிந்து நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து மைக்ரோபோனை அகற்ற நடுவர்கள் உத்தரவிட்டனர். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story