வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா
x

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கயானா,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. கைல் வெர்ரின்னே 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 3-வது நாளான இன்று தொடர்ந்து பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story