2வது டெஸ்ட் போட்டி; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 21 ரன்கள் முன்னிலை


2வது டெஸ்ட் போட்டி; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 21 ரன்கள் முன்னிலை
x

image courtesy; AFP

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

ராவல்பிண்டி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2ம் நாள் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் மட்டும் எடுத்தது.

வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்த போது 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 78.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக அபாரமாக ஆடிய லிட்டன் தாஸ் 138 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷஷாத் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்த போது 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 21 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story