2வது டெஸ்ட்: 3ம் நாள் ஆட்டம் முடிவில் 207 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து


2வது டெஸ்ட்: 3ம் நாள் ஆட்டம் முடிவில் 207 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து
x

Image Courtesy: AFP 

இங்கிலாந்து தரப்பில் புரூக் 71 ரன், ஜோ ரூட் 37 ரன் எடுத்து களத்தில் உள்ளனர்.

நாட்டிங்ஹாம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்கள் குவித்து 41 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 41 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக க்ராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 3 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து போப் களம் புகுந்தார். டக்கட் - போப் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் போப் 51 ரன்னிலும், டக்கட் 76 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய புரூக் அரைசதம் அடித்தார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 51 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து தற்போது வரை 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் புரூக் 71 ரன், ஜோ ரூட் 37 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story