2-வது டி-20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை


2-வது டி-20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
x

Image Courtesy : AFP

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த இரு அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்கா 32 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் மெண்டிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் கடந்த குசால் பெரேரா 53 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். ரவி பிஷ்னோய் வீசிய 17-வது ஓவரில் தசுன் ஷனகா, ஹசரங்கா ஆகியோர் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story