2வது ஒருநாள் கிரிக்கெட்; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
பெங்களூரு,
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் மந்தனாவின் சதத்தின்(117 ரன்) உதவியுடன் இந்திய அணி 265 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்ஆப்பிரிக்காவை 122 ரன்னில் சுருட்டியதில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷா சோபனா (4 விக்கெட்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
பேட்டிங்கில் ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் சோபிக்கவில்லை. இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது முக்கியமாகும். இந்திய சுழலில் தடுமாறிய லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டுகிறது.
அதேநேரத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி களம் இறங்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.