ஐ.பி.எல். அணிகள் 4 வீரர்களை தக்க வைக்க அனுமதி - இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு
அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு அணிகள் 4 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிப்பது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய் துள்ளது.
புதுடெல்லி,
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சமீபத்தில் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது. புதிய அணிகளின் வரவு காரணமாக இந்த முறை மெகா ஏலம் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், ஏலத்தில் எவ்வளவு தொகை செலவிடலாம், வீரர்களை கழற்றி விடுவதற்கான கெடு உள்ளிட்ட நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவும் அணி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். அணிகள் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விவரம் கசிந்துள்ளது. இதன்படி 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிப்பது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த 4 வீரர்களில் 3 பேர் இந்தியர், ஒருவர் வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் இருக்கலாம். ஆனால் 2018-ம் ஆண்டு பெரிய ஏலத்தின் போது, விடுவித்த வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ வாய்ப்பை பயன்படுத்தி எடுக்கும் முறை இருந்தது. அந்த சலுகை இந்த தடவை இருக்காது.
லக்னோ, ஆமதாபாத் அணிகள் ஏலப்பட்டியலில் இடம் பெறும் வீரர்களில் இருந்து 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாகவே எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வீரர்களை வாங்க முன்பு ரூ.85 கோடி செலவிட்டன. அது ரூ.90 கோடியாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு நவம்பர் மாதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய சீசன்களில் தக்கவைக்கப்படும் 3 வீரர்களுக்கு முறையே ரூ.15 கோடி, ரூ.11 கோடி, ரூ.7 கோடி வீதம் ஊதியமாக ஒதுக்கப்பட்டது. இந்த சீசனில் ஊதியம் எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் டோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி அல்லது வெய்ன் பிராவோ ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட் ஆகியோர் நீடிப்பார்கள் என்றும், ஹர்திக் பாண்ட்யா கழற்றி விடப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story