20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்த்து இருக்க வேண்டும் - முன்னாள் வீரர்கள் கருத்து


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்த்து இருக்க வேண்டும் - முன்னாள் வீரர்கள் கருத்து
x

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்த்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.

மும்பை:

16 அணிகள் இடையிலான 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடக்கிறது. நேரடியாக சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி அக்டோபர் 23-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை. பவுலர் யாராவது காயம் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அவர்களுக்கு பதிலாக உடனடியாக அழைப்பதற்கு ஏதுவாக மாற்று வீரர்கள் பட்டியலில் ஷமி வைக்கப்பட்டு உள்ளார். அணித் தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் சிலரது கருத்து வருமாறு:-

முகமது அசாருதீன்: பிரதான அணி பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி விடுவிக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. தீபக் ஹூடாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யரும், ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக முகமது ஷமியும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

சுனில் கவாஸ்கர்: உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரும் விளையாட வேண்டும். பந்து வீச்சுக்கு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் 4 பவுலர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ரிஸ்க் எடுக்காவிட்டால் எப்படி வெற்றி பெற முடியும்? ரிஸ்க் எடுக்கும் போது தான் அதற்குரிய பலன் கிடைக்கும்.

இது ஒரு சிறந்த அணி. சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, இந்த அணியால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேலின் வருகையின் மூலம் பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது. இது போன்ற பவுலர்கள் இருக்கும் போது, முதலில் பேட் செய்து அந்த ஸ்கோரை கொண்டு எதிரணியை மடக்க முடியும்.

மதன்லால்: முகமது ஷமி மிகப்பெரிய பவுலர். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்த கூடும். 15 பேர் அணியில் அவரை ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை. முதல் 3 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தக்கூடிய ஒரு பவுலர் அவர். உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சிறந்த பந்து வீச்சு கூட்டணி இருக்க வேண்டியது அவசியமாகும். 180 ரன்களுக்கு மேல் குவித்தாலும் தரமான பந்து வீச்சாளர்கள் இல்லை என்றால் வெற்றி பெற முடியாது. அணிக்கு 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாது. குறிப்பிட்ட நாளில் அல்லது சாதகமான ஆடுகளம் இருக்கும் போது சுழற்பந்து வீச்சை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்த தொடரில் வலுவான வேகப்பந்து வீச்சு இருப்பது அவசியமாகும். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய தொடர்களின் போது இவர்களது உடல்தகுதி கண்காணிக்கப்படும். இளம் பவுலர் அர்ஷ்தீப் சிங் நன்றாக கற்று வருகிறார். புவனேஷ்வர்குமாரும் இருக்கிறார். ஆனாலும் ஷமியையும் தேர்வு செய்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அவருக்கு ஆஸ்திரேலிய சீதோஷ்ண நிலை அனுகூலமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னாள் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்தும், பவுன்சுடன் கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஷமியால் அசத்த முடியும். அவருக்கு அணியில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்று கூறினார்.

32 வயதான ஷமி 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவருக்கு இந்திய 20 ஓவர் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story