நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - இங்கிலாந்து அபார வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - இங்கிலாந்து அபார வெற்றி
x
தினத்தந்தி 19 Feb 2023 9:26 AM GMT (Updated: 19 Feb 2023 9:26 AM GMT)

இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மவுன்ட் மாங்கானு,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி 306 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 19 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராட் 7 ரன்னிலும், ஆலி போப் 49 ரன்னிலும் நீல் வாக்னெர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹாரி புரூக் 54 ரன்னிலும், ஜோ ரூட் 57 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 31 ரன்னிலும், பென் போக்ஸ் 51 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 73.5 ஓவர்களில் 374 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னெர், மிட்செல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டும், நீல் வாக்னெர், ஸ்காட் குக்கலைன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணி 28 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டிவான் கான்வே 2 ரன்னிலும், கேன் வில்லியம்சன் ரன் எதுவும் எடுக்காமலும், டாம் லாதம் 15 ரன்னிலும், ஹென்றி நிகோல்ஸ் 7 ரன்னிலும், டாம் பிளன்டெல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து பரிதவித்தது . டேரில் மிட்செல் 13 ரன்னுடனும், மிட்செல் பிரேஸ்வெல் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது . தொடர்ந்து நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது.அந்த அணியின் மிட்செல் பிரேஸ்வெல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் டேரில் மிட்சேல் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் நியூசிலாந்து 126 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் , ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Related Tags :
Next Story