நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: சிரியா செல்லும் உலக சுகாதார அமைப்பு தலைவர்...!


நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: சிரியா செல்லும் உலக சுகாதார அமைப்பு தலைவர்...!
x

துருக்கி - சிரியாவில் கடந்த திங்கட்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

டமாஸ்கஸ்,

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் தற்போதைய நிலவரப்படி துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி - சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரண நிதியாக வழங்க உலக வங்கி உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று சிரியா செல்கிறார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் கெப்ரோயஸ் உலக சுகாதார அமைப்பால் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளை நேரில் பார்வையிடுகிறார்.


Next Story