சம்பளம் தவிர பணியாளர்களை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்... ஆய்வில் தகவல்
சம்பளம் தவிர பணியாளர்களை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
வாஷிங்டன்,
ஒவ்வொரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது வழக்கம். அதற்கேற்ப பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலையை பெறும்.
இதுபோன்று சம்பளம் கொடுப்பது மட்டுமே பணியாளர்களை கூடுதலாக பணி செய்ய ஊக்குவித்து விடாது. உற்பத்தியை அதிகரிக்க, பணியாளர்களுக்கு சம்பளம் தவிர்த்து வேறு சில நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என பின்வரும் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவில் சமீபத்தில் நிறுவனங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஊழியர்களுக்கு பரிசு அட்டைகள், புத்துணர்ச்சி சுற்றுலாக்கள் மற்றும் துணிமணிகள், மின்னணு பொருட்கள் அல்லது மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஏதேனும் விற்பனை பொருளை வாங்கி கொள்வதற்கான சலுகைகளை நிறுவனங்கள் வழங்கி உள்ளன.
இதற்காக ஆண்டுக்கு ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 330 கோடிக்கும் கூடுதலான தொகையை 84 சதவீத நிறுவனங்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் தங்களது பணியாளர்களுக்கு வழங்கி உள்ளன.
இதனை ஆய்வு செய்த வாட்டர்லூ பல்கலை கழகத்தின் இணை பேராசிரியர் ஆடம் பிரெஸ்லீ, பண பரிசுகள் கூட பணியாளர்களை ஊக்குவிக்கும் என்றபோதிலும், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பரிசு பொருட்களாக வழங்க ஏன் முன்வந்தன என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது என கூறியுள்ளார்.
பரிசுகளை பெறுவோர், எளிதில் அவற்றை எப்படி பயன்படுத்தி கொள்வது, விருப்பம் மற்றும் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்யும் தன்மையுடன் இருப்பது, புதுமையான பரிசு மற்றும் அந்த பரிசு எப்படி வழங்கப்படுகிறது ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
அதனடிப்படையில், பணப்பரிசு வழங்குவதற்கு பதிலாக இதுபோன்ற விசயங்களில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது உற்பத்தியை அதிகரிக்க செய்யும் காரணிகளாக அறியப்பட்டு உள்ளன.
இதன்படி, வெறும் பணம் மட்டுமே கூடுதல் பரிசாக வழங்கப்படுவதற்கு பதிலாக, மேற்கூறிய பரிசு அட்டைகள் உள்ளிட்ட வெவ்வேறு வகையிலான விசயங்கள் பணியாளர்களின் முயற்சி மற்றும் செயல் திறனை தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் அதிகரித்து உள்ளன.
வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் சம்பளத்துடன் வேறு சில பரிசுகளையும் பெறும்போது, அதனால் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என ஆய்வின் முடிவில் பிரஸ்லீ கூறியுள்ளார்.