சீனாவில் உய்குர் சமூக மக்கள் இனப்படுகொலை; ஐ.நா. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்!


சீனாவில் உய்குர் சமூக மக்கள் இனப்படுகொலை; ஐ.நா. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்!
x

சீனாவில் உய்குர் சமூக மக்களுக்கு கட்டாய கருத்தடை, பாலியல் வன்கொடுமை. இனப்படுகொலையை கண்டித்து அமெரிக்காவில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாஷிங்டன்,

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உய்குர் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை அந்நாட்டு அரசு நிகழ்த்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில் பகுதி முன்பு, உய்குர் சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீனாவால் நடத்தப்படும் 'உய்குர் இனப்படுகொலை' மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் ஐ.நா. சபையை வலியுறுத்தினர்.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு, பாதுகாப்பு என்ற பெயரில், உய்குர் சமூக மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பது, அந்த குடும்பங்களை வலுக்கட்டாயமாக பிரிப்பது மற்றும் இருபாலருக்குக்ம் கட்டாய கருத்தடை செய்தல் ஆகிய கொடுமைகளை அரங்கேற்றி வருவதாக புகார் எழுந்தது.

உய்குர் முகாம்களில் இருந்து தப்பியவர்களின் குடும்பங்கள் பல தடுப்பு முகாம்களில் உள்ளன. அங்கிருந்து அவர்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி விடுவிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரினர்.

உய்குர்களின் பிரச்சினைகளை ஐ.நா. அமைப்பால் கையாள முடியவில்லை என்று அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்தனர். மேலும், உய்குர் இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் அவரது குழுவினர் உடந்தையாக இருப்பதாகவும் போராட்ட தளத்தில் சில பதாகைகள் எழுதப்பட்டிருந்தன.

முன்னதாக, கடந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் அவரது குழுவினர் சீனாவிற்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் சீனப் பயணத்திற்கு பரவலான விமர்சனங்கள் எழுந்தன. உய்குர் இனப்படுகொலை குறித்து அவர்கள் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதை மேற்கோள் காட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.

சீனாவில் நிலவும் மனித உரிமைச் சூழல் பற்றிய முழுமையான சுதந்திரமான மதிப்பீட்டை நடத்த சென்ற அவரது குழுவை செயல்படுத்தவிடாமல் சீன அரசு தடுத்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ள்ளது.

உய்குர் இனப்படுகொலை குறித்து அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டதாவது:-

சின்ஜியாங்கில், "இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன". அங்கு வசிப்பவர்கள் அப்பகுதியின் நிலைமை குறித்து புகார் செய்யவோ அல்லது வெளிப்படையாக பேசவோ கூடாது என்று சீன அரசால் எச்சரிக்கப்பட்டனர்.

காணாமல் போன நூற்றுக்கணக்கான உய்குர் சமூக மக்களின் இருப்பிடம் குறித்தும், தடுப்புக்காவலில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் நிலைமை என்ன என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா மனித உரிமை குழு சந்திக்கவும் அந்நாட்டு அரசு விடவில்லை.

உய்குர் சமூக மக்களை தனிமைப்படுத்தி அவர்களை சித்திரவதை செய்து, கட்டாய கருத்தடை, பாலியல் வன்முறை மற்றும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரிப்பது உள்ளிட்ட மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரமான செயல்களை சீன அரசு நடத்தி வருகிறது என்று அங்கிருந்து தப்பிப்பிழைத்தவர்கள், கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மக்களின் குடும்ப உறுப்பினர்கள் விவரித்துள்ளனர்.

இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை குழு ஆணையரின் சீனப் பயணத்தின் முடிவுகள் குறித்து 'உலக உய்குர் காங்கிரஸ்' கடும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்களுடைய இந்த பயணம், மனிதகுலத்திற்கு எதிரான சீனாவின் குற்றங்கள் மற்றும் உய்குர் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை மூடிமறைக்க இது ஒரு வாய்ப்பாக சீனாவுக்கு மாறியுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


Next Story