வடகொரியா ஏவுகணை விவகாரம்: 5 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவசர ஆலோசனை
வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
பாங்காக்,
அமெரிக்க எல்லையை தொடும் அளவு திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2 நாட்களில் 2-வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையானது, சுமார் 15 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே பாங்காக் நகரில் நடைபெறும் ஆசியா-பசிபிக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தாய்லாந்து சென்றுள்ளார். இந்த சமயத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக உடனடியாக ஒரு அவசர ஆலோசனைக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், "வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல்" என்று தெரிவித்தார். மேலும் இது பிராந்தியத்தில் பாதுகாப்பை சீர்குலைக்கிறது என்றும் தேவையில்லாமல் பதட்டங்களை எழுப்புகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.