அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விவாதத்திற்கு கமலா ஹாரிஸ், டிரம்ப் தயாரான விதம் பற்றி தகவல்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விவாதத்திற்கு கமலா ஹாரிஸ், டிரம்ப் தயாரான விதம் பற்றி தகவல்
x

கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையேயான நேரடி விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியாவில், இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடந்தது. ஏ.பி.சி. நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

70 வயதுடைய டொனால்டு டிரம்ப் மற்றும் 59 வயதுடைய கமலா ஹாரிஸ் இருவரிடையே முதன்முறையாக நடைபெற்ற நேரடி விவாத நிகழ்ச்சியில், இருவரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய தேர்தல் கணிப்பின்படி, பெண் வாக்காளர்களிடையே கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு காணப்படுகிறது. இது வாக்குகளாக மாறுமா? என்பது தேர்தலுக்கு பின்னரே தெரிய வரும். எனினும், டிரம்ப் 48 சதவீதம் என்ற அளவில் கமலா ஹாரிசை விட (47 சதவீதம்) முன்னிலையில் காணப்படுகிறார்.

இந்த நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருவரும் தயாரான விதம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன் டிரம்புடனான விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசும்போது திணறினார். இது சர்ச்சையானது. இதனை தொடர்ந்து தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலகினார். கமலா ஹாரிசை முன்னிறுத்தி தன்னுடைய ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கமலா ஹாரிஸ் தன்னை தயார்படுத்தி கொண்டார். ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அவர், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். விவாத நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டார்.

ஆனால் அதற்கு மாறாக, டிரம்போ விவாதத்திற்கு தயாராக தளர்வான அணுகுமுறையையே மேற்கொண்டார். அதிக சிரமம் எடுத்து கொள்ளவில்லை என அவருடைய குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story