'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற டிரம்ப் சதி செய்தார்' - நாடாளுமன்ற கலவர விசாரணைக்குழு தகவல்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற டிரம்ப் சதி செய்தார் - நாடாளுமன்ற கலவர விசாரணைக்குழு தகவல்
x

2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற டிரம்ப் சதி செய்ததாக நாடாளுமன்ற கலவர விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராகவும், ஜோ பைடன் ஜனநாயக கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டனர்.

கடுமையான போட்டியில் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, ஜோ பைடனின் வெற்றிக்கு சான்றளிக்க 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடந்தது. ஆனால் அதை ஏற்க முடியாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் இது கரும்புள்ளியாக அமைந்தது.

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுபற்றி விசாரணை நடத்துகிற குழுவின் துணைத்தலைவர் லிஸ் செனி கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையின்போது டிரம்ப், தாக்குதல் நெருப்புச்சுடரை ஏற்றி விட்டார். பல மாதங்களாக டிரம்ப் ஜனாதிபதி தேர்தலை முறியடிப்பதற்கும், ஜனாதிபதி அதிகார மாற்றத்தை தடுப்பதற்கும் ஒரு அதிநவீன 7 பகுதி திட்டத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்தார். இந்த திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தின் ஆதாரத்தையும் நீங்கள் பார்ப்பீர்கள். ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளது என்கிற தனது தவறான கருத்தை பரப்புவதற்காக டிரம்ப், அப்போதைய அட்டார்னி ஜெனரல் பில் பாரை மாற்ற திட்டமிட்டார்.

டிரம்ப் உண்மையில் கலவரத்தை நிறுத்தவோ அல்லது அவரது ஆதரவாளர்களை வெளியேறச் சொல்லவோ எதையும் செய்ய விரும்பவில்லை. இதற்கான சாட்சியங்களை பொதுமக்கள் கேட்பார்கள்.

கலவரத்தைத் தணிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தன்னிடம் கூறிய ஆலோசகர்களிடம் டிரம்ப் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார், அவர் கோபமாக இருந்தார் என்று அவர் கூறினார்.


Next Story