அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் பல்வேறு சர்வதேச நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதி மந்திரி ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொதுபொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
இந்த சந்திப்பில், வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்திய மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் நிதியுறவு சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வருகை தரும்படி எல்லன்னுக்கு மத்திய நிதி மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க நிதி மந்திரியாக இந்தியாவில் நடைபெற இருக்கும் பொருளாதார மற்றும் நிதியுறவு கூட்டத்தில், 9-வது நட்புறவு கூட்டத்தில், பங்கேற்க கூடிய தனது முதல் இந்திய பயணம் அமையும் என எல்லன் குறிப்பிட்டார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் இந்த பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் நிதி மந்திரி பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி, ஜி20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர் உள்ளிட்டோருடனான வருடாந்திர கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி மந்திரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுபட்டார்.
எகிப்து நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு மந்திரி ராணியா அல் மஷாத் உடன், இரு நாடுகளின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய பார்வைகளை மத்திய மந்திரி பகிர்ந்து கொண்டார்.
இதன்பின் நெதர்லாந்து நிதி மந்திரி சிக்ரித் காக் உடனான சந்திப்பில் ஜி20, சர்வதேச சரக்குகள், கடன் மற்றும் பருவகால விவகாரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு செயல்திட்டங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
சவுதி அரேபிய நிதி மந்திரி முகமது அல் ஜடான் உடனான சந்திப்பில் பல்வேறு பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விவகாரங்கள் பற்றியும் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தென்கொரிய துணை பிரதமர் மற்றும் நிதி மந்திரியான சூ கியூங்-ஹோ உடனான சந்திப்பில், ஜி20 தலைமைத்துவத்திற்கு இந்தியாவுக்கு ஆதரவு தரும்படி மத்திய மந்திரி கேட்டு கொண்டார்.
இதன்பின்னர், முன்னணி வர்த்தக தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன், இந்தியாவின் கொள்கை முக்கியத்துவங்கள் பற்றி சுட்டி காட்டி பேசியதுடன், முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை அடையாளப்படுத்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான திட்டமிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.