உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி


உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி
x

கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து, தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி பூண்டுள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான ஓராண்டுக்கும் மேலான போரில் இரு தரப்பிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷியா தாக்கி உள்ளது என உக்ரைன் குற்றச்சாட்டு கூறியது.

இந்த நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுபற்றிய வீடியோவும் வெளியானது. கிரிமீயாவின் மைய நகரான ஒக்தியாபிரிஸ்க் நகரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது. இதேபோன்று மற்றொரு வீடியோவில், 3 வெடிகுண்டு சத்தங்கள் கேட்கின்றன.

ஆளில்லா விமானம் ஒன்று வெடிபொருள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், அந்த பகுதியை சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள நபர்களை பாதுகாப்புக்காக அரசு நிர்வாகம் வெளியேற்றியது.

இதன் தொடர்ச்சியாக பல ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், உக்ரைனின் கார்கிவ் பகுதிக்கு வடகிழக்கே குபியான்ஸ்க் நகர் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிகாரிகள் கூறினர்.

இந்த சூழலில் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த சமீபத்திய உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் தூண்டி விடுகின்றன என குற்றச்சாட்டு தெரிவித்த ரஷிய வெளியுறவு அமைச்சகம், உக்ரைனின் நடவடிக்கைகள் எல்லாம், பதற்றங்களை அதிகரிக்க செய்யும் மேற்கத்திய நாடுகளின் நோக்கங்களின் பாதிப்பாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கிரிமீயா மீது இரவு நேரத்தில் 17 ஆளில்லா விமானங்களை ஏவி உக்ரைன் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

இதனால், கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை தங்களது தரப்புக்கு உள்ளது என்றும் ரஷியா தெரிவித்து உள்ளது.


Next Story