ரஷிய முன்னாள் அதிபரை தேடப்படும் பட்டியலில் வைத்த உக்ரைன்


ரஷிய முன்னாள் அதிபரை தேடப்படும் பட்டியலில் வைத்த உக்ரைன்
x

ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.



கீவ்,


ரஷியாவின் முன்னாள் அதிபராக 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷிய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகிறார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்து உள்ளது.

இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கிறார். உக்ரைன் நிலப்பரப்பின் ஒற்றுமையை வலுவிலுக்கவும் மற்றும் உக்ரைன் எல்லைகளில் அத்துமீறி நடந்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு உள்ளன.

ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பலர் இந்த பட்டியலில் உள்ளனர். அவர்களில் ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷோய்கு, நாடாளுமன்ற கீழவை தலைவர் வியாசெஸ்லாவ் விளாடின், மேலவை தலைவர் வேலன்டினா மத்வியங்கோ மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலய் பட்ருசேவ் ஆகியோரும் வைக்கப்பட்டு உள்ளனர்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டுள்ள படையெடுப்புக்கு பின்னர் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த விவரங்களை உக்ரைனிய அதிகாரிகள் ஏன் முன்பே வெளியிடாமல், தற்போது வெளியிட்டு உள்ளனர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.


Next Story