ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - 12 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - 12 பேர் உயிரிழப்பு
x

Image Courtesy : AFP

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவனாது. மேலும் இது பூமிக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த பயங்கர நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருந்தாலும் கூட அண்டை நாடான பாகிஸ்தானில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, குவெட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பதறிப்போன மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏராளமான கட் டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். வடமேற்கு பாகிஸ்தானில் நிலநடுக்கத்தின் பாதிப்பு சற்றும் அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி நகரில் உள்ள சந்தைகளில் நிலநடுக்கத்துக்கு பயந்து மக்கள் சிதறி ஓடியபோது கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 160-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியானதாகவும், 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தலீபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருநாடுகளிலும் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story