அமெரிக்க சபாநாயகர் வரவால் பதற்றம்: தைவானைச் சுற்றிலும் சீனா போர்ப் பயிற்சி..!


அமெரிக்க சபாநாயகர் வரவால் பதற்றம்: தைவானைச் சுற்றிலும் சீனா போர்ப் பயிற்சி..!
x

அமெரிக்க சபாநாயகர் சென்றதால் பதற்றமான சூழலில் தைவானைச் சுற்றிலும் சீனா போர்ப்பயிற்சியில் இறங்கியது.

தைபே,

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான தூரம் 100 மைல்கள்தான். சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும், சீனா அப்படி நினைக்கவில்லை.

தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியெல்லாம் விட்டு விட மாட்டோம் என்று தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா போர்க்கொடி உயர்த்தி வருகிறது.

இதன்காரணமாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு, அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சென்று, அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து, அமெரிக்காவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், சீனாவின் ஒரு ஜோடி டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) தைவானின் கின்மென் தீவுகளின் மீது நேற்று முன்தினம் இரவில் பறந்ததும், அவை தைவானால் சுட்டு விரட்டியடிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதை தைவான் கின்மென் ராணுவ கட்டளை மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சாங் சோன் சுங் நேற்று உறுதிசெய்தார். இந்த டிரோன்கள் உளவு பார்க்க வந்ததாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தைவானைச் சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு, நேற்று நண்பகல் 12 மணிக்கு போர்ப்பயிற்சியைத் தொடங்கி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் மிகப்பெரிய போர்ப்பயிற்சி இதுதான் என சொல்லப்படுகிறது. இந்தப் போர் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் சீனா அதிநவீன் 'டாங்பெங்' ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது. இந்த நடவடிக்கை, தங்கள் இறையாண்மையை மீறுவதாகவும், முற்றுகைக்கு சமமாக உள்ளதாகவும் தைவான் கூறுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க கடற்படை யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் விமானம் தாங்கி கப்பலை தைவானை நோக்கி அனுப்பி உள்ளது. இதை அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.


Next Story