தூதர் பெயரில் உளவாளிகள்; ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து முடிவு


தூதர் பெயரில் உளவாளிகள்; ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து முடிவு
x

ரஷியா தூதர்கள் என்ற பெயரில் உளவாளிகளை நாட்டில் இறக்கி உள்ளது என கூறி ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

ஆம்ஸ்டர்டாம்,


ரஷியா ஓராண்டாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வு காண, தூதரகம் வழியே அமைதி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், உலக நாடுகள் கோரிக்கையை ரஷியா புறக்கணித்து உள்ளது. இந்நிலையில், ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தும் அந்நாடு போரில் இருந்து விலகிடவில்லை.

இந்த சூழலில், பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் உள்ள ரஷிய தூதர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. ரஷிய உளவாளிகள் என்ற பெயரில் பலரை திருப்பி அனுப்பியது.

இந்நிலையில், ரஷியாவுடன் நடந்த பேச்சுவார்த்தையை நெதர்லாந்து (டச்சு) அரசு நிறுத்தி வைத்து உள்ளது. நெதர்லாந்து அரசில் வெளியுறவு மந்திரியாக உள்ள வாப்கே ஹோயெக்ஸ்டிரா வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், தூதரக போர்வையில் ரஷியா தனது உளவாளிகளை நெதர்லாந்தில் பணியமர்த்த முயற்சித்து உள்ளது என்பது ஏற்க முடியாதது.

ரஷியாவின் தொடர்ச்சியான இந்த முயற்சிகளை ஏற்று கொள்ள முடியாது. அதனாலேயே நெதர்லாந்து நாட்டில் உள்ள ரஷிய தூதர்களை வெளியேற்றும் முடிவில் உள்ளோம்.

இதுதவிர, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எங்களது தூதரக அலுவலகம் மூடப்படுகிறது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரஷிய வர்த்தக அலுவலகமும் மூடப்பட உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தி நெதர்லாந்து டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், வெளியேற்றப்படும் மொத்த ரஷிய தூதர்கள் எண்ணிக்கை விவரம் தெளிவாக தெரியவரவில்லை. தி ஹேக் நகரில் ஒரு தூதரகம், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரஷிய வர்த்தக அலுவலகம் தவிர்த்து, லேண்ட்கிராபிலும் ரஷிய கூட்டமைப்புக்கு என தூதரகம் ஒன்றும் உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதன்படி, வருகிற திங்கட்கிழமை ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள டச்சு தூதரகம் மூடப்பட உள்ளது. அதனால், டச்சு நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் அமைப்புகளும் மாஸ்கோவில் உள்ள தூதரக அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தூதரக சேவைகளை பெற்று கொள்ளலாம் என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. ரஷியாவுக்கு, அந்நாட்டு தூதர்கள் வெளியேற 2 வார கால அவகாசமும் அளித்து உள்ளது. ரஷியாவும் இதுபோன்று வெளிநாட்டு தூதர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Next Story