தென் சீனக்கடல் விவகாரம்: சீன தூதரிடம் எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்
சீன தூதர் ஹுவாங் சிலியனை அழைத்து தூதரக ரீதியிலான தனது எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மணிலா,
உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக தென் சீனக்கடல் விளங்குகிறது. இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் தீவு, பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இங்கு உணவு, நீர் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றது. இந்த படகை சீன ராணுவ கப்பல் மூலம் கடலோர காவல் படையினர் சேதப்படுத்தினர்.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கண்டனத்தை தெரிவித்தன. மேலும் தென் சீனக்கடல் குறித்த ஒப்பந்தத்தை அமெரிக்கா புதுப்பித்தது. அதன்படி பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக்கடலில் தாக்குதல் நடத்தினால் கூட்டாளி நாடுகளை பாதுகாக்க வேண்டும். ஆனால் ஆசிய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை சீனா எச்சரித்தது. இந்தநிலையில் சீன தூதர் ஹுவாங் சிலியனை அழைத்து தூதரக ரீதியிலான தனது எதிர்ப்பை பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.