பாகிஸ்தானில் கடும் மின்வெட்டு: இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்..!


பாகிஸ்தானில் கடும் மின்வெட்டு: இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்..!
x

பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

கராச்சி,

இலங்கையை போல பாகிஸ்தானிலும் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது.

இதனால் பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஜூலை மாதம் நாடு கடும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது கடுமையான மின்வெட்டினால் பாகிஸ்தான் நாடு தவித்து வருகிறது. அதன் காரணமாக அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தையும் முன் கூட்டியே மூடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பல மணி நேரம் மின் வெட்டு இருப்பதால் பாகிஸ்தானில் இணையதள சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக தொலைத்தொடர்பு துறை ஆபரேட்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனை தீர்க்க எரிபொருள் இறக்குமதிக்காக கத்தார் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.


Next Story