நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு.. சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட சிரியா தூதரகம் கோரிக்கை


நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு.. சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட சிரியா தூதரகம் கோரிக்கை
x

நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட வேண்டும் என, ​இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்துள்ளன. அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்புப் படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவிட வேண்டும் என, இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள சிரியா தூதரகம் வெளியிட்டுள்ள கோரிக்கையில், துயரத்தில் இருக்கும் சிரியா மக்களுக்கு உதவிட, மருத்துவ உபரகணங்கள், அவசர மருந்துகள், போர்வைகள், கூடாரங்கள், குளிரை போக்க உதவிடும் துணிகள், உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி தர விரும்பும் நபர்களுக்காக, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code-ஐயும், சிரிய தூதரகம் வெளியிட்டுள்ளது.


Next Story