உக்ரைன் பயணத்தின் போது ஜோ பைடனின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை - ரஷியா


உக்ரைன் பயணத்தின் போது ஜோ பைடனின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை - ரஷியா
x

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசிய பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 363-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக நேற்று உக்ரைன் சென்றார். மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு பயணமாக போலாந்து சென்ற ஜோ பைடன் அங்கிருந்து ரகசியமாக ரெயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

இந்த சூழ்நிலையில், ஜோ பைடனின் உக்ரைன் பயணம் குறித்து ரஷியாவுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது. தூதரக வழியில் ஜோ பைடனின் பயணம் குறித்து ரஷியாவிடம் அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் பயணத்தில் ஜோ பைடனின் பாதுகாப்பிற்கு எந்த வித உத்தரவாதத்தையும் ரஷியா அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை தலைவர் அலெக்சாண்டர் பொர்ட்னிகொவ் கூறுகையில், ஜோ பைடனின் கீவ் பயணம் குறித்து தூதரகம் வழியாக ரஷியாவிடம் அமெரிக்கா தெரிவித்தது. ஜோ பைடனின் பாதுகாப்பிற்கு நாங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை' என்றார்.


Next Story