சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்


சீனா செல்கிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 14 May 2024 11:24 PM GMT (Updated: 15 May 2024 9:11 AM GMT)

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்தது. தொடக்கம் முதலே இந்த போரில் .நடுநிலைமை வகிப்பதாக சீனா கூறியது.

அதன்படி ரஷியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவற்றை சீனா செய்யவில்லை. எனினும் ஐரோப்பிய நாடுகள் விதித்து வந்த பொருளாதார தடைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் உக்ரைனுக்கு எதிராக போர் முயற்சிக்கு பயன்படும் எந்திரங்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் மறைமுகமாக ரஷியாவுக்கு சீனா உதவுகின்றது.

இந்தநிலையில் சீன அதிபர் ஜின்பிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அதிபர் புதின் நாளை (வியாழக்கிழமை) சீனாவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு தங்கும் அவர் அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


Next Story