உக்ரைனுக்கு புதிதாக ரூ.3,279 கோடி ராணுவ உதவி தொகை; அமெரிக்கா திட்டம்


உக்ரைனுக்கு புதிதாக ரூ.3,279 கோடி ராணுவ உதவி தொகை; அமெரிக்கா திட்டம்
x

உக்ரைனுக்கு புதிதாக ரூ.3,279 கோடி மதிப்பிலான ஒரு ராணுவ உதவி தொகையை வழங்குவது பற்றி விரைவில் அறிவிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான ரஷியாவின் படையெடுப்பால் உலக நாடுகளில் விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து போர் தீவிரமடைந்து உள்ள சூழலில், ஓராண்டை கடந்தும் போர் நிற்காமல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷியா தாக்கி உள்ளது என உக்ரைன் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

உக்ரைனுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன்படி, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு புதிதாக ரூ.3,279 கோடி மதிப்பிலான ஒரு ராணுவ உதவி தொகையை வழங்குவது பற்றி விரைவில் அறிவிக்க அந்நாடு திட்டமிட்டு உள்ளது.

இதற்கு அதிபர் பைடனின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட பி.டி.ஏ. எனப்படும் அமைப்பின் நிதியை பயன்படுத்தி நிதி தொகுப்பு வழங்கப்படும்.

இதன்படி அவசரகாலத்தின்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமலேயே அமெரிக்க அதிபர், நிதியை பரிமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த புதிய ராணுவ நிதி தொகுப்பின்படி, கண்ணிவெடிகளை நீக்கும் சாதனங்கள், தேசிய நவீன தரையில் இருந்து வானில் சென்று தாக்க கூடிய ராக்கெட்டுகளுக்கான வெடிபொருட்கள், அதிக இயங்கு திறன் சார்ந்த ராக்கெட்டுகளுக்கான வெடிபொருட்கள், பீரங்கிகளை அழிக்கும் ஆயுதங்கள், விமான அழிப்பு சாதனங்களுக்கான வெடிபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைனுக்காக 43-வது முறையாக அளிக்கப்படும் நிதி தொகுப்புக்கான ஒப்புதலாக இது இருக்கும். இதனுடன் சேர்த்து, உக்ரைனுக்கான நிதியுதவிக்கான ஒப்புதல் மொத்தம் ரூ.3.36 லட்சம் கோடியாக உள்ளது.


Next Story