'காஷ்மீர் ஒற்றுமை தினம்' என கூறி தூதரகங்களுக்கு பாக். அனுப்பிய ரகசிய தகவல் - இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க சதி


காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி தூதரகங்களுக்கு பாக். அனுப்பிய ரகசிய தகவல் - இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க சதி
x
தினத்தந்தி 5 Feb 2023 5:57 AM GMT (Updated: 5 Feb 2023 6:22 AM GMT)

காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிப்ரவரி 5-ம் தேதியை காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தினம் பாகிஸ்தானில் அனுசரிக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று பாகிஸ்தான் இந்த தினத்தை அனுசரிக்கிறது.

இதனிடையே, காஷ்மீர் ஒற்றுமை தினம் பாகிஸ்தானில் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'காஷ்மீர் ஒற்றுமை தினம்' என கூறி இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள சதித்திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவலின்படி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள (இந்தியா தவிர) தங்கள் நாட்டின் தூதரகங்களுக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது. அதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாக். வெளியுறவுத்துறை தூதரகங்கள் இன்று காஷ்மீர் ஒற்றுமை தினம் தொடர்பாக அறிக்கை, டுவிட்டரில் பதிவுகள் பதிவிடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தூதரகங்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இமெயில் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு நாடுகளில் பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி இந்தியா, இந்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்திய அரசு, இந்திய பாதுகாப்பு படையினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உலகம் முழுவதும் உள்ள தங்கள் தூதரகங்களுக்கு பாகிஸ்தான் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story