இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் பிரதிநிதிகள் ரகசிய பயணம்; தூதரக உறவை தொடங்க திட்டம்?


இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் பிரதிநிதிகள் ரகசிய பயணம்; தூதரக உறவை தொடங்க திட்டம்?
x

Image Courtesy: Reuters

இஸ்ரேல் நாட்டை பாகிஸ்தான் இதுவரை அங்கீகரிக்கவில்லை.

ஜெருசலேம்,

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. ஆனால், பாகிஸ்தான், இந்தோனேசியா, குவைத் போன்ற சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும், இஸ்ரேலுடன் வர்த்தகம் உள்பட எந்த வித சுமூக உறவையும் இந்த நாடுகள் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முசாரப் அரசில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் நசீம் அஷ்ரப். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள பாகிஸ்தானி-அமெரிக்கரான நசிம் அஷ்ரப் தலைமையிலான குழு இஸ்ரேலுக்கு சென்றுள்ளது.

சுற்றுலா விசாவில் அஷ்ரப் தலைமையில் இஸ்ரேல் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு இந்த வாரம் இஸ்ரேல் அதிபர் அசக் ஹர்சொகை ரகசியமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர்.

இந்த ரகசிய பயணம் இஸ்ரேலை நாடாக அங்கீகரிக்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல், பாகிஸ்தான் பிரதிநிதிகளின் இஸ்ரேல் பயணமும் அதிபருடனான ரகசிய சந்திப்பும் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவை தொடங்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதிநிதிகளுடன் இந்தோனேசிய நாட்டின் பிரதிநிதிகளும் இஸ்ரேலுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், இந்தோனேசிய பிரதிநிதிகளின் இந்த ரகசிய பயணம், இந்த நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவை தொடங்க புதிய பாதையை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story